மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்களின் பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மையையும், அதன் விதிமீறல்களையும் உள்ளூர் திட்டக் குழுமமும், மாநகராட்சியும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையின் ஒட்டுமொத்த வணிக நிறுவனங்களும் உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், வீட்டு உபயோகப்பொருள் விற்பனைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை கடைகளும் மிக நெருக்கமான கட்டிடங்களில் செயல்படுகின்றன.
மிகப்பெரிய கார்ப்பரேட் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் தொடங்கி சாதாரண சந்துக்கடைகள் வரை எந்தக் கடைகளுக்கும் முறையான பார்க்கிங் வசதி இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகின்றன.
அதுபோல், பெரும்பாலான வணிக நிறுவன கட்டிடங்களில் எந்த அடிப்படை பாதுகாப்பு வசதியும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற அவசர வழிகள் இல்லை.
தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வாகனங்களும் தாராளமாக வந்து செல்ல முடியாத இடங்களிலேயே வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. உள்ளூர் திட்டக்குழுமமும், மாநகராட்சியும் நிர்ணயித்துள்ள கட்டிட விதிமுறைகள், மீனாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டார வியாபார நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்று சொல்கிற அளவிற்கு இப்பகுதி கட்டிடங்கள் வரைமுறையில்லாமல் காற்று கூட புக முடியாமல் நெருக்கமாக பல அடுக்கு மாடி வரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்களை மறைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளன.
அதனாலேயே, கோவிலைச் சுற்றி ஒரு கி.மீ., சுற்றளவில் குறிப்பிட்ட அளவு உயரத்திற்கு அதிகமாகக் கட்டடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்த உத்தரவு நாளடைவில் செயல்படுத்தப்படாமல் போனதால் தற்போது வழக்கம்போல் சந்துபொந்துகளில் கூட கட்டிடங்கள் நிரம்பியிருக்கின்றன.
அதுபோல், 40 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்கள் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி அதிகம் உள்ளன. இந்தக் கட்டிடங்களில் உறுதித்தன்மையை ஆராயாமலே அதன் மேல் மாடுகள் கட்டி வாடகைக்கவிடப்படுகின்றன. அதனாலே, தீபாவளிக்கு முந்தைய நாள் விளக்கத்தூன் அருகில் நவபத்கானா தெருவில் உள்ள ஜவுளிக்கடை கட்டிடம் தீ விபத்தில் இடிந்து தீயணைப்பு வீரர்கள் மீது விழுந்தது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். அதனால், தற்போது மீண்டும் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் உறுதித்தன்மையையும், விதிமுமீறல் கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொதுவாக வீடு, கடை, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவோர் அதன் சதுர அடியைப் பொறுத்து மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் கட்டிட வரைப்பட அனுமதி பெற வேண்டும்.
ஆனால், சாதாரண வீடுகள் முதல் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் வரை யாரும் வரைப்படத்தில் இருக்கிறபடி கட்டிடங்கள் கட்டுவதில்லை. கட்டிடங்கள் உறுதித்தன்மை, பார்க்கிங் வசதி, வரைப்பட விதிமீறல் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சென்று ஆய்வு நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் வருகின்றனர்.
அவர்களை மீறி கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. வரைப்பட அனுமதியை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு அதன் விதிமுறை மீறல்களுக்கு தகுந்தவாறு அபராதம் மட்டும் விதித்துவிட்டு, வரியை நிர்ணயிக்கின்றனர், ’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி (பொ) சுப்பிரமணியிடம் கேட்டபோது, ‘‘தீ விபத்து நடந்த கட்டிடம் அனுமதி பெற்றுதான் கட்டியுள்ளனர். வரைபட அனுமதியை மீறி கூடுதலாக கட்டினால் அதற்கான அபராதம் விதித்து வரி நிர்ணயிப்போம். பல கட்டிடங்கள், முந்தைய காலத்தில் கட்டியவை. அதனையும், அதன் உறுதிதன்மையையும் ஆய்வு செய்து வருகிறோம், ’’ என்றார்.