திருநெல்வேலி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரத்திக் தயாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
1.1.2021-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச் சாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், மாநகராட்சிகிக் உட்பட்ட குடியிருப்போர் நல சங்கங்கள் ஆகியவற்றில் வாக்காளர்கள் பார்வையிட்டு தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்- 645494, பெண் வாக்காளர்கள்- 671179, இதரர்- 89 பேர் என்று மொத்தம் 13,16,762 வாக்காளர்கள் உள்ளனர். சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் விவரம்:
திருநெல்வேலி- 282127, அம்பாசமுத்திரம்- 237004, பாளையங்கோட்டை- 263944, நாங்குநேரி- 271122, ராதாபுரம்- 262565.
கடந்த 14.2.2020-ன்படி மாவட்டத்தில் மொத்தம் 1330118 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 14.2.2020 முதல் 31.10.2020 வரை வாக்காளர் பட்டியலில் 5008 பேர் சேர்ந்துள்ளனர். 18364 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2743 பேர் திருத்தம் செய்துள்ளனர். 462 பேருக்கு முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1.1.2021-ல் 18 வயது நிறைவடைந்தவர்கள் அல்லது 31.12.2002-க்கு முன்பாக பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை புதிதாக சேர்க்க மனு அளிக்கலாம். வரும் 20-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ மனு அளிக்கலாம். வரும் 21, 22, 12, 13-ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் 1475 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும்.
தங்கள் முகவரிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை மனுக்களை நேரில் அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in (National Vetification Service Portal) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இந்த வாய்ப்பை தகுதியுள்ள அனைவரும் பயன்படுத்தி வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20.1.2021-ல் வெளியிடப்படும்.
இது தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு 0462-2501181, கோட்டாட்சியர் அலுவலகம் 0462-2501333, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகம் 04634260124 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேற்கொள்ளப்படவுள்ள விழிப்புணர்வு வாகனத்தில் ஸ்டிக்கர்களை ஆட்சியர் ஒட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.