கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், எலெக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை தென்காசி மாவட்டத்துக்குள் கொண்டு வந்து கொட்டுவது குறித்த புகார்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் 33 வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தென்காசி மாவட்டம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது. தொடர்ந்து அரசின் திட்டப் பணிகள், வளர்ச்சிப் பணிகள், பொதுமக்களுக்கான சேவைகளில் கவனம் செலுத்தப்படும். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு உயர் அலுவலர்களால் 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளன. அரசின் பரிசீலனை முடிந்ததும் உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடக்கூடாது என்பதற்காக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தென்காசி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததால் கரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதித்த பின் தடை நீக்கப்படும்.
தென்காசி மாவட்டம் மாநில எல்லையில் உள்ள மாவட்டம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடும். இதனால் பிற மாநிலங்களில் உள்ள கரோனா தொற்று நிலவரங்களையும் அரசு ஆய்வு செய்து, நோய் பரவக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தும்போது, குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும்.
கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், எலெக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை தென்காசி மாவட்டத்துக்குள் கொண்டு வந்து கொட்டுவது குறித்த புகார்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.