தமிழகம்

மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பும், வரவேற்பும்

எம்.மணிகண்டன்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றும், எதிர்த்தும் வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர், மூத்த வழக்கறிஞர், முன்னாள் அதிகாரிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ்:

தமிழக காவல்துறைக்கு வழக்கறிஞர்களாகிய நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று கூறியுள்ளோம். எனினும் சென்னை உயர் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படிப்பட்ட தீர்ப்பு அவசியம்தான். ஆனால், இது பல நடைமுறை சிக்கல்களையும், சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே, இதை ஏற்பது கடினம். வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது என்பதால்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் இந்தியில் பேசுவார்கள், நமது வழக்கறிஞர்கள் தமிழில் பேசுவார்கள். இதனால் சிக்கல்தான் வரும்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம்:

இன்றைய சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. ஆகையால், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கும், மத்திய படையினரின் பாதுகாப்புக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். மத்திய பாதுகாப்பு படையினர் நேர்த்தியான முறையில் பாதுகாப்பு வழங்குவார்கள். காவல்துறையினரோ உள்ளூர் ஆட்கள், வேண்டியவர்கள் என்று பாரபட்சம் பார்ப்பார்கள். எனவே, இது சரியான தீர்ப்பு.

சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வி.நளினி:

மத்திய பாதுகாப்புப் படையினரின் வருகை, தமிழக வழக்கறிஞர்களுக்கு சங்கடத்தையே தரும். சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறைய வாயில்கள் உள்ளன. இதனால் வெளி நபர்கள் உள்ளே வருவது எளிதாகிறது. எனவே, சுற்றுச்சுவரை முறைப்படுத்தி வாயில்களை குறைக்க வேண்டும். அப்படி செய்தால் மாநில காவல்துறையின் பாதுகாப்பே போதுமானதாக இருக்கும்.

மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஏனென்றால், நீதிமன்ற வளாகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டேயிருக்கிறது. அதனால், மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அவசியமாகிறது. தமிழக காவல்துறையினர், ஒரு சிலருக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இதை முயற்சித்து பார்ப்பது நல்லதாக இருக்கும்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி:

நான் அனைத்திந்திய காவல்துறை பணியில் இருந்தவள். எனவே, மத்திய பாதுகாப்பு படையையும், மாநில காவல் துறையையும் ஒன்றாகவே பார்க்கிறேன். எனினும், மத்திய பாதுகாப்புப் படையிடம் தயவு தாட்சண்யத்தை எதிர்பார்க்க முடியாது. என்ன விதி இருக்கிறதோ, அந்த விதிமுறைகளை சமரசமின்றி பின்பற்றுவார்கள். மேலும், ஆள் பற்றாக்குறையால் 3 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒரு காவலர் மீது சுமத்தும் அவலம் நடக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக காவலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறேன்.

SCROLL FOR NEXT