திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலையில் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். தொடர்ந்து, யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி 108மகாதேவர் சன்னதி வந்து சேர்ந்தார். மாலையில் தங்கச் சப்பரத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, பிரகார வலம் நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் கடம்பூர்செ.ராஜு கோயிலில் தரிசனம்செய்துவிட்டு, கந்தசஷ்டி விழாவுக்கான நிர்வாக அனுமதியை கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில், சிவாச்சாரியார்களிடம் வழங்கினார்.
வரும் 26-ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 20-ம் தேதியும், திருக்கல்யாணம் 21-ம்தேதியும் நடைபெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையால் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடக்கின்றன.
இந்த விழாக்கள் https://www.youtube.com/channel/UCDiavBtRKei0x1fYVupEw/live என்ற யூடியூப் சேனலில் கோயில் நிர்வாகத்தால் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பழநியில் காப்புக் கட்டுதல்
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு நேற்று உச்சி கால பூஜை முடிந்ததும் மூலவர், உற்சவர், விநாயகர், நவ வீரர்கள், துவார பாலகர்களுக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், அவர்கள் வீட்டிலேயே காப்புக் கட்டி விரதம் இருக்கின்றனர்.