தி.மலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 
தமிழகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் வரும் 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, மாட வீதியில் சுவாமி வீதியுலா மற்றும் மகா தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகளின் பவனி நடைபெற உள்ளது. பின்னர், வரும் 29-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருநாளன்று, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், அண்ணாமலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையைசீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பர்வத ராஜகுல சமூகத்தைச் சேர்ந்த மண்ணு நாட்டார் தலைமையிலான குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொப்பரை சீரமைப்புப் பணி நிறைவு பெற்றதும், ஓவியர் மூலம் வர்ணம் பூசப்பட்டு, ஆண் மற்றும் பெண் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘அர்த்தநாரீஸ்வரர்’ படம் வரையப்படும். பின்னர் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை, 5-வது ஆண்டாக தொடர்ந்து பயன்படுத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT