நாகர்கோவிலில் நடைபெற்ற `தி இந்து’ வாசகர் திருவிழாவை யொட்டி, `இயற்கையின் மடியில் காணி பழங்குடிகள்’ என்ற ஒரு பக்க சிறப்பு கட்டுரை கடந்த மாதம் 20-ம் தேதி வெளியானது. இக்கட்டுரையின் தாக்கத்தால் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி காட்சி தொடர்பியல் மாணவ, மாணவியர் 39 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில், பேச்சிப்பாறை அணைக்கு மேல் பகுதியில் வசிக்கும் காணி மக்களை சந்தித்து திரும்பி இருக்கிறார்கள்.
காணி மக்களின் வாழ்க்கைச் சூழல், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அறியவும், காணி மக்களிடம் கலந்துரையாடவும், துறை பேராசிரியர்கள் ஜெ.பி.ஜோஸபின் மேரி, சந்தோஷ்குமார் தலைமையில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஜோஸபின்மேரி கூறியதாவது: காணி மக்களும், அவர்களின் குழந்தைகளும் படகு சவாரியை மட்டுமே நம்பி உள்ளனர். அற்புதமான இயற்கை சூழல். சுற்றுப்புறம் யாவும் இயற்கை மூலிகைகளின் நறு மணத்துடன், காணும் இடம் யாவும் பச்சை பசேலென காட்சியளிக்கும் நிலத்தை வந்தடைந்தோம்.
வானம் முட்டும் உயர்ந்த மரங்கள், அவற்றைச் சார்ந்து உயர்ந்து வளரும் குருமிளகுச்செடி, ரப்பர் மரங்கள், நிலத்தை ஒட்டிக் கிடக்கும் நிலவேம்புச்செடிகள், வீடுகளின் கோட்டை சுவர்களாக படர்ந்து நிற்கும் செம்பருத்தி செடிகள் என இயற்கையுடன் இயற்கையாக வாழும் காணி மக்களை, ஒவ்வொரு வீடாகச் சென்று சந்தித்தோம். அவர்களது பழக்க வழக்கங்கள், பண்பாடுகளை நேரில் தெரிந்து கொண்டோம். `தி இந்து’ நாளிதழில் வெளிவந்த காணி பழங்குடிகள் குறித்த கட்டுரையே, இம்மக்களை சந்திக்க வேண்டும் என்ற எங்கள் எண்ணத்துக்கு ஆக்கமாக அமைந்தது’என்றார்.
மாணவி மோனிகா கூறும்போது, `காணி மக்கள் செங்கல் அல்லது மூங்கில் வீடுகளில் குடியிருக்கின்றனர். சில வீடுகள் நவநாகரீக வார்ப்பு கட்டிடங்களாகவும் மாறியுள்ளன. வெளியாட்களுடன் பேச தயக்கம் காட்டுகின்றனர். அவர்களும் இரு சக்கர வாகனம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அங்குள்ள 90 வயது முதியவர் இனிமையாகப் பாடியது நினைவில் இருக்கிறது’ என்றார்.