குருப் பெயர்ச்சியையொட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த குரு தட்சிணாமூர்த்தி. (அடுத்த படம்) தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குரு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை. 
தமிழகம்

ஆலங்குடி கோயிலில் குருப் பெயர்ச்சி விழா; பக்தர்களுக்கு அனுமதியில்லை: ஆன்லைனில் ஒளிபரப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப் பெயர்ச்சி விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நேற்று இரவு 9.48 மணிக்கு பெயர்ச்சிஅடைந்ததையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று குருப் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப் பெயர்ச்சியையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. குரு தட்சிணாமூர்த்திக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று இரவு 8 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 9.48 மணிக்கு குருப் பெயர்ச்சி நேரத்தில் குரு தட்சிணாமூர்த்திக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்நிகழ்வுகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் இரவு 9 மணி முதல் ஆன்லைனில் யூ டியூப் மூலம் ஒளிபரப்பப்பட்டன. நேற்று காலை முதல் கோயிலுக்குள் பக்தர்கள் ஒரு மணிநேரத்துக்கு 200 பேர் வீதம் அனுமதிக்கப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோயிலில் கூட்டம் சேர்வதை தவிர்க்க, குருப் பெயர்ச்சி நேரத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திட்டை கோயில்

தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில், தனி சன்னதியில் நின்ற கோலத்தில் ராஜகுருவாக அருள்பாலித்து வரும் குரு பகவானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 9.48 மணிக்கு குருப் பெயர்ச்சியையொட்டி, குரு பகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோயிலுக்குள் இரவு 7 முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT