கரோனா வைரஸ் பரவல் அச்சம் நீடிப்பதால், வெளியூர்களில் வசிக்கும் பலர் தீபாவளி விடுமுறைக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சொந்த ஊர் வந்திருந்தவர்கள் மீண்டும் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ஊர் திரும்பி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகத் துடன் கொண்டாடப்பட்டது.
வெளியூர்களில் தங்கி பணிபுரியும் பலர் சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் பயணத்தை தவிர்த்தனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் தங்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
இதனிடையே, தீபாவளிப் பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் மக்களுக்கு பாதிப்பு இல்லை.
தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில், பலர் சொந்த ஊரில் இருந்து, தாங்கள் பணி புரியும் ஊர்களுக்கு நேற்று மதியம் முதல் கார் மற்று இருசக்கர வாகனங்களில் புறப்பட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகம் இருந்தது.
இதுதொடர்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த சிலர் கூறும்போது, “கரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு பேருந்துகளில் பயணிப்பது சிரமம் என்பதால் இருசக்கர வாகனங் களில் பயணிக்கிறோம். பயண நேரம் அதிகரிப்பு, கூடுதல் செலவு என்றாலும் இந்த பயணம் வித்தியாசமாக அமைந்தது” என்றனர்.