தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே, மிகக் குறைந்த அளவு தண்ணீருடன் காணப்படும் தொப்பையாறு அணை. 
தமிழகம்

வடகிழக்கு பருவமழையால் தொப்பையாறு அணை நிரம்புமா? - பாசனப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகிலுள்ள தொப்பையாறு அணை வடகிழக்கு பருவ மழையால் நிரம்புமா என பாசனப் பரப்பு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அருகில் அமைந்துள்ளது தொப்பையாறு அணை. கடந்த 1987-ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. 50.18 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி கொண்ட இந்த அணையில் இருந்து ஆயக்கட்டு பகுதி 5330 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசனம் பெறுகின்றன. இதுதவிர, அணையின் மூலம் சில நூறு ஏக்கர் நிலம் நிலத்தடி நீரைப் பெற்று மறைமுக பாசன வசதி பெறுகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொப்பையாறு அணை நிரம்பியது. அதன் பின்னர் இந்த அணைக்கு ஆண்டுதோறும் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் மிக மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் நிற்கிறது.

தென்மேற்கு பருவமழைக் காலம் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், வட கிழக்கு பருவ மழைக் காலத்திலாவது அணை நிரம்புமா அல்லது கணிசமான அளவு தண்ணீரை பெறுமா என பாசனப்பரப்பு ஆயக்கட்டு விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து, பாசனப் பரப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலு கூறும்போது, ‘‘தொப்பையாறு அணையின் பாசனப்பரப்பு பகுதியில் நிறைவாக விவசாயப் பணிகள் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.தென்மேற்கு பருவ மழையில் அணைக்கு புதுதண்ணீர் வரவே இல்லை.

வட கிழக்கு பருவமழைக் காலத்திலாவது சேர்வராயன் மலைத் தொடரில் கனமழை பெய்து வேப்பாடி ஆற்றின் வழியாக தொப்பையாறு அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டால் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத காலங்களில் வேறு வேலைகளுக்கு செல்வதைத்தான் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

SCROLL FOR NEXT