தமிழகம்

கஜா புயலடித்து 2 ஆண்டுகளாகியும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு: இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக அரசு அலுவலர்கள் தகவல்

செய்திப்பிரிவு

2018-ம் ஆண்டு நவ.15-ம் தேதி நள்ளிரவு தொடங்கி 16-ம் தேதி காலை வரை வீசிய கஜா புயல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான மக்களின் வாழ் வாதாரத்தை புரட்டிப் போட்டது. பல வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

தென்னை, மா, பலா போன்ற லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. மின்விநியோகம், குடி நீர், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின. பின்னர், அரசின் தீவிர முயற்சியால் படிப்படியாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மின் பாதிப்புகள், குடிநீர் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டன. மேலும், சேதம் அடைந்த வீடுகள், பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

கஜா புயல் வீசி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக் கப்பட்ட பல்வேறு பகுதிகள், இன்னும் அதே சுவடுகளுடனேயே இருந்து வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எ.ஸ்ரீதர் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையாக கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படவில்லை. அரையப்பட்டியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. பல்வேறு இடங்களில் இடிந்த பேருந்து பயணியர் நிழற்குடை, அரசு கட்டிடங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. சேத மடைந்த வீடுகளை சீரமைக்க முடியாமல், அப்போது போர்த் தப்பட்ட தார்ப்பாய்களைக் கொண்ட வீடுகளிலேயே மக்கள் இன்னும் வசித்து வருகின்றனர். மேலும், கஜா புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக் கப்படவில்லை. வனத் துறை சார்பிலும் நிவாரணம் வழங்கப் படவில்லை என்றார்.

இதுகுறித்து அரசு அலுவலர்கள் தரப்பில் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6.20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்தன. அவற்றில், கஜா வாழ்வாதார தொகுப்பு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 3.50 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப் பட்டன. தென்னையில் ஊடுபயிர் சாகுபடிக்குத் தேவையான விதை, இடுபொருட்களும் வழங் கப்பட்டன. புயலால் சேதமடைந்த 1,454 ஏக்கர் வாழைக்கு ரூ.3.81 கோடி, 255 ஏக்கரில் பலாவுக்கு ரூ.36 லட்சம், 305 ஏக்கரில் எலுமிச்சைக்கு ரூ.40 லட்சம், 487 ஏக்கரில் காய்கறி பயிர்களுக்கு ரூ.97 லட்சம் என மொத்தம் ரூ.125 கோடி தோட்டக் கலைத் துறை மூலம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் 62.42 லட்சம் தென்னை மரங்கள் வேருடனும், பாதியாகவும் முறிந்து விழுந்தன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் மட்டும் 45.07 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், புயலை எதிர்கொண்டு நின்ற தென்னை மரங்கள் காய்ப்பு தராமல் பட்டுப்போனதால், விவசா யிகள் மிகவும் அவதியடைந்தனர்.

இருப்பினும், விவசாயிகள் இழந்த வாழ்வாரத்தை மீட்பதற்காக புதிய தென்னங்கன்றுகளை நட்டனர். ஆனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மானியங்கள் இதுவரை முறையாக கிடைக் கவில்லை என்றும், தென்னை வளர்ச்சி வாரியத்தை தஞ்சாவூர் பகுதியில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தென்னை விவசாயி குருவிகரம்பை நாகராஜ் கூறியதாவது:

கஜா புயல் வீசி 2 ஆண்டுகளான நிலையில் பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளில் 90 சதவீதம் புதிய தென்னங்கன்றுகள் நடப்பட்டுவிட்டன. அவ்வாறு நடப்பட்ட ஒரு வயதுக்கு மேலான புதிய மரங்கள் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்புக் கூன் வண்டுகளின் தாக்குதலாலும், குருத்தழுகல் நோயாலும் பாதிக் கப்பட்டு நாசமாகி விட்டன. இந்த நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.

தென்னை விவசாயி மருங் கப்பள்ளம் காந்தி கூறியதாவது: மத்திய அரசின் தென்னை வாரியம் கேரளா மாநிலம் கொச்சியிலும், தமிழகத்துக்கான அதன் மண்டலம் சென்னையிலும்தான் உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள், சாகுபடி குறித்த தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், வளர்ச்சி திட்டங்களுக்கான தகவல்கள், மானியங்கள் போன்றவற்றை பெறுவதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக, தஞ்சாவூரில் தென்னை உற்பத்தி அதிகளவில் இருக்கும் பட்சத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாரியத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை. எனவே, தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகங்களை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT