அதிமுகவுக்கு ஆதரவாக அரசு செலவில் பிரச்சாரங்களை செய்ய அனுமதி செய்யக் கூடாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அரசு செலவிலேயே பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை நிறுத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அதிகாரிகள் என அனைவருக்கும் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.
துரைமுருகன் அனுப்பிய கடிதத்தில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புகழ்கின்ற விதத்தில் துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும், எல்இடி திரையைக் கொண்ட 32 வேன்களை தமிழகம் முழுக்க இயக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்து வருகின்றனர்.
அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்களை பாராட்டுவதோ நெருக்கம் காட்டுவதோ சட்டப்படி குற்றமாகும். மேலும், அரசு செலவில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை புகழ்வது கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இத்தகைய வேலைகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இது சட்டப்படி குற்றமாகும். எனவே, இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், இது சம்பந்தமாக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்'' என்று துரைமுருகன் கடிதம் எழுதியதாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.