பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வழக்கமாக நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் பங்கேற்க, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை டிவி, யூடியூப் மூலம் ஒளிபரப்புவதற்குக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து சுவாமியைத் தரிசனம் செய்வர்.
இந்த ஆண்டு கரோனா பேரிடர் காரணமாக முதலில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து தற்போது கந்தசஷ்டி விழாவில் பங்கேற்கவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பழநியில் கந்தசஷ்டி விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி, திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை, அறநிலையத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பழநியில் கந்தசஷ்டி விழா நவம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆறாம் நாள் அன்று சூரசம்ஹார நிகழ்ச்சியும், ஏழாம் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்பர். ஆனால், இந்த ஆண்டு கரோனா காரணமாக மண்டகப்படிதாரர், பொதுமக்கள் யாரும் பங்கேற்க அனுமதி அளிப்பதில்லை எனக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியை தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது.
சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் இரண்டு தினங்களில் பக்தர்கள் மலைக்கோயில் செல்லவும், திரு ஆவினன்குடி மற்றும் பெரியநாயகியம்மன் கோயில் செல்லவும் அனுமதியில்லை.
சூரசம்ஹாரம் நடைபெறும் கிரிவீதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படவுள்ளன. பொதுமக்களுக்கு அன்று கிரிவீதிகளுக்குச் செல்ல அனுமதியில்லை என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.