தமிழகம்

தீபாவளியை முன்னிட்டு களை கட்டிய தோவாளை மலர் சந்தை: பூக்கள் விலை 5 மடங்கு உயர்வு

எல்.மோகன்

தீபாவளியை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. வழக்கத்தை விட பூக்களின் விலை 5 மடங்கு .உயர்ந்திருந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை பண்டிகை நாட்கள், மற்றும் சுபமுகூர்த்த நாட்களுக்கு முந்தைய தினங்களில் வெளியூர்களில் இருந்து பல டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

இவற்றை கொள்முதல் செய்ய கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கூடுவர்.

கரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த ஆயுதபூஜைக்கு பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆயின. விலையும் கூடுதலாக இருந்ததால் வியாபாரிகள் லாபம் அடைந்தனர். அதன் பின்னர் தீபாவளியை முன்னிட்டு இன்றில் இருந்தே தோவாளை மலர் சந்தை களைகட்டியிருந்தது.

தோவாளையில் உள்ள மலர் தோட்டங்களில் இருந்து மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓசூர், பெங்களூரு, உதகை மற்றும் வெளியூர்களில் இருந்து வழக்கத்தைவிட 200 டன்னிற்கும் மேலான பூக்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்த நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி தேவைக்கான பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் கூடினர். கரோனா கட்டுப்பாடால் கேரளாவில் இருந்து குறைவான வியாபாரிகளே வந்திருந்தனர். அதே நேரம் உள்ளூர் வியாபாரிகளால் தோவாளை மலர் சந்தையில் விற்பனை மும்முரமாக நடந்தது. காலை 10 மணிக்குள் பெரும்பாலான பூக்கள் விற்று தீர்ந்தன.

பூக்கள் விலை வழக்கத்தை விட 5 மடங்கு விலை அதிகமாகியிருந்தது. தீபாவளி பண்டிகையின்போது பெண்கள் சூடும் மல்லிகை பூ கிலோ ரூ.1300க்கு விற்பனை ஆனது. பிச்சி ரூ.1000க்கு விற்றது. இதைப்போல் கிரேந்தி, செவ்வந்தி, தாமரை, ரோஜா உட்பட பூஜைக்கு பயன்படுததும் அனைத்து பூக்களுமே வழக்கத்தைவிட விலை பன்மடங்கு உயர்ந்திருந்தது. பூக்கள் சீக்கிரமாக விற்று தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மலர் வியாபாரிகள் கூறுகையில்; தோவாளை மலர் சந்தையில் இந்த ஆண்டு அதிக விற்பனை ஆயுதபூஜையன்று நடந்தது. அதன் பின்னர் தீபாவளி தேவைக்கான பூக்கள் விற்பனை பரபரப்பாக நடந்தது. உள்ளூர் பூக்களுடன் வழக்கத்தை விட 230 டன் பூக்கள் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. இதே நிலை இனி வரும் பண்டிகையிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT