புதுச்சேரியில் 2-வது நாளாக கரோனா தொற்று பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று புதிதாக 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ. 13) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,355 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 55 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும், மாஹேவில் 13 பேருக்கும் என மொத்தம் 75 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவே உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 335 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 738 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 1,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 42 பேர், காரைக்காலில் 13 பேர், ஏனாமில் 4 பேர், மாஹேவில் 11 பேர் என மொத்தம் 70 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 571 (95.36 சதவீதம் பேர்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 251 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 13 ஆயிரத்து 419 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது".
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவல் கடந்த ஒருமாத காலமாக வெகுவாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று 2-வது நாளாக கரோனா தொற்று பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் மக்களிடம் கரோனா குறித்த அச்சம் குறைந்துள்ளது.
பண்டிகைக் காலமான இப்போது பிரதான சாலைகளிலும், கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். இதனால், புதுச்சேரி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.