யானைகவுனியில் புதன் அன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய மருமகள், அவரது சகோதரர்கள் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை யானைகவுனி விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்த தலில் சந்த் (74), அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோர் புதன் அன்று மாலை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீட்டின் படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தனர்.
அவர்களது மகள் பிங்கி (35) வீட்டுக்குச் சென்றபோது மூவரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் விசாரணையில் இறங்கிய போலீஸாருக்குப் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.
மூவரையும் கொலை செய்தது அவர்கள் வீட்டு மருமகள் ஜெயமாலாவும் அவரது உறவினர்களும் என்ற தகவல் கிடைத்தது. கொலை நடந்த வீட்டின் முன் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் மதியம் 3 மணி அளவில் மருமகள் ஜெயமாலா தனது உறவினர்களுடன் வீட்டுக்கு வருவது பதிவாகியிருந்தது.
பின்னர் போலீஸாரின் தொடர் ஆய்வில் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தியதில் அனைவரும் மகாராஷ்டிராவிலிருந்து காரில் சென்னை வந்தது தெரியவந்தது. கொலை செய்தபின்னர் அனைவரும் காரில் தப்பிச் செல்வதை ஆங்காங்கே உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் கண்டறிந்தனர்.
பின்னர் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மகாராஷ்டிரா விரைந்தனர். அங்கு ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், உறவினர்கள் ரபீந்த்ராத்கர், விஜய் ஆகியோரைக் கைது செய்தனர். ஜெயமாலாவும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
ஜெயமாலாவுக்கும், கணவர் குடும்பத்தாருக்கும் இருந்த பிரச்சினையில் கணவர் குடும்பத்தார் மீது கடும் கோபத்தில் இருந்த ஜெயமாலா தனது சகோதரர் கைலாஷ், ஆகாஷ் ஆகியோருடன் சிலரை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். இதற்கு முன்னரும் இரண்டு முறை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கணவர் குடும்பத்தாரைக் கொல்ல முயன்றுள்ளார். ஆனால் சந்தர்ப்பம் சரியில்லாததால் தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று சென்னைக்கு வந்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தங்கள் குடும்பத்தாருக்குக் கொலை மிரட்டல் இருப்பது குறித்து தலில் சந்த் அளித்த புகாரில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதான அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னரே முழு விவரம் தெரியவரும்.
மூவரையும் தலையில் சுட்டுக்கொன்றது மூலம் உடன் வந்தது எதற்கும் இரக்கப்படாத கூலிப்படைக் கும்பலாக இருக்கும் என போலீஸார் கருதுகின்றனர். கைது செய்யப்பட்ட விகாஷ், மகாராஷ்டிராவில் பெரிய ரவுடி என்று கூறப்படுகிறது.