அரியாங்குப்பம் அடுத்த மணவெளி சுப்பையா நகரைச் சேர்ந்தவர் சாந்தி (31). இவர் கடந்த 8-ம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. அதேபோல் மற்றொரு பைக்கும் அந்த பகுதியில் காணவில்லை. அரியாங்குப்பம் போலீஸார் பைக் திருடனை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஓட்டி வந்ததுதிருட்டு பைக் என்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் திருச்சி அடுத்த அரியமங்கலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த புரட்சி பாபு (32) என்பதும், தற்போது புதுச்சேரி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. பைக்மெக்கானிக்கான இவர் அரியாங்குப்பம் காவல் நிலையம் அருகே மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
அங்கு பலர் தங்களது இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க விட்டுச் செல்வதுண்டு. அவ்வாறு விட்டுச் செல்பவர்களின் பைக்குக்கு கள்ளச் சாவி தயாரித்து வைத்துக்கொண்டு, பழுது நீக்கம் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பின்னர் அவர்களை பின்தொடர்ந்து முகவரியை தெரிந்து கொள்வார். பின்னர் கள்ளச் சாவி போட்டு பைக்கை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
திருடும் வண்டிகளை திருச்சியில் விற்றுவிட்டு பேருந்தில் புதுச்சேரி திரும்பி விடுவார். புரட்சி பாபுவை கைது செய்த போலீஸார், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.