கடந்த 30 ஆண்டுகளாக கடலூர் மாவட்டக் காவல் நிலையங்களில் விசாரணைக் காக அழைத்துச் செல்லப்படும் சந்தேகத் திற்குரிய நபர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.
மர்மமான முறையில் உயிரிழந்தவர் களின் உறவினர்கள், போலீஸார் மீதுகுற்றம் சுமத்தினாலும், சில வழக்குகளில் மட்டுமே காவல் துறையினர் தண்டனைக்கு ஆளாவதும், ஏனைய வழக்குகளில், ‘போதிய ஆதாரம் இல்லை’ என தள்ளுபடி செய்யப்படுவதும் நடக்கிறது.
2001-ம் ஆண்டு கம்மாபுரம் காவல்நிலையத்தில் உயிரிழந்த ராஜக்கண்ணு வழக்கில் 7 பேருக்கு தண்டனை கிடைத் தது. 1991 ஆண்டில் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த நந்தகோபால் வழக்கை, கொலை வழக் காக பதிவு செய்யாமல், அவரது மனைவிபத்மினி பாலியல் சித்ரவதை செய்யப் பட்டதை மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 11 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் கடந்த 2004-ம்ஆண்டு உயிரிழந்த வசந்தா, குள்ளாஞ் சாவடி காவல் நிலையத்தில் கடந்த 2006-ம் ஆண்டு உயிரிழந்த ராமலிங்கம், 2015-ம் ஆண்டு நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் உயிரிழந்த சுப்பிரமணி, கடந்த 2013-ம் ஆண்டு வடலூர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு, பண்ருட்டி பேருந்துநிலையத்தில் உயிரிழந்த முருகன், காட்டுமன்னார்கோவில் காவல் நிலை யத்தில் 2019-ம் ஆண்டு காவல் நிலைய கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் வினோத் ஆகியோரது வழக்கு விசா ரணை கிடப்பிலேயே உள்ளது.
இந்தச் சூழலுக்கு நடுவில் கடந்த 4-ம் தேதி நெய்வேலி நகரிய காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி செல்வமுருகன், விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது உயிரிழந் துள்ளார். உடல்நலக் குறைவால் அவர்இறந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவரது குடும் பத்தினரோ, போலீஸார் தாக்கியதில் தான் உயிரிழந்தார் எனக் கூறி உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
புகாரே இல்லாமல் வழக்குப்பதிவா?
இதுதொடர்பாக செல்வமுருகன் மனைவி பிரேமாவிடம் பேசியபோது, “ஆய்வாளர் மற்றும் குற்றப் பிரிவு காவலர்கள் தாக்கியதில் தான் என் கணவர் உயிரிழந்தார். நெய்வேலி டவுன்ஷிப்பைச் சேர்ந்த காவியா என்பவரின் செயினை அக்டோபர் 20-ம் தேதி பறித்துச் சென்றதாக கூறப்படும் நிலை யில், அக்டோபர் 28-ம் தேதி என் கண வரை பிடித்து விசாரித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட பெண் புகாரே கொடுக் காத நிலையில், என் கணவர் மீது எப்படி வழக்கு பதிவு செய்தனர். அக்.30-ம் தேதி என்னிடம் பேசிய குற்றப்பிரிவு காவலர் ஒருவர், உன் கணவரை சிறைக்குகொண்டு செல்ல வாகன வாடகையாக ரூ.5 ஆயிரம் வேண்டும் என்று கேட்டார். நாங்கள் வசதியாக இருப்பதை அறிந்துகொண்டு, பணம் பறிக்கவே என் கண வரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
என் கணவரின் உடலை அடையாளப் படுத்தப் மட்டுமே ஒப்புக்கொண்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறி, என் கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்துள் ளனர். இதுதொடர்பாக குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் எனது விளக்கத்தை நேற்று முன்தினம் பதிவு செய்துள்ளேன்.
என் கணவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனது கணவரின் உடலை வேறு மாநில மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். அதன் பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம்” என்றார்.
பிரேமா குற்றச்சாட்டு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, “செல்வமுருகனை நாங்கள் எவரும் தாக்கவில்லை. அவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. அவருக்கு வலிப்பு நோய் இருப்பதும் 2011-ம் ஆண்டிலேயே தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறோம்” என்றார்.
தற்போது இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு, டிஸ்பி குணவர்மன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.