தமிழகம்

தீபாவளி வாடிக்கையாளர்களுக்கு எந்த வசதியும் இல்லை: வீடுகள் முன் கார்களை நிறுத்துவதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தீபாவளிப் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுடைய வாகனங்களை நிறுத்தவும், கழிப்பிடம் செல்லவும் மாநகராட்சியும், வியாபார நிறுவனங்களும் போதிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை.

அதனால், வாடிக்கையாளர்கள் வீடுகள் முன் வாகனங்களை நிறுத்துவதும், திறந்த வெளியில் கழிப்பிடம் செல்வதுமாக மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்கள் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளன.

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்காக தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு புத்தாடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், பாத்திரங்கள், பலகாரங்கள் வாங்குவதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பஜார் வீதிகளில் குவிந்து வருகின்றனர்.

அதனால், ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், பலகார கடைகள், மளிகை கடைகளில் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை தொடங்கி இரவு வரை, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் அதிகரித்துள்ளது.

மதுரையின் ஒட்டுமொத்த வர்த்தக நிறுவனங்களும் இப்பகுதிகளில் அமைந்துள்ளதால் சித்திரைத்திருவிழா தற்போது மதுரை திருவிழா கோலம் பூண்டுள்ளது.

தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொதுமக்களுக்கு, வியாபார நிறுவனங்களும், மாநகராட்சியும் போதிய வசதி செய்து கொடுக்கவில்லை.

குறிப்பாக எந்த வணிக நிறுவனங்களிலும் கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் நிறுத்த பார்க்கிங் வசதியில்லை. அதனால், வாடிக்கையாளர்கள் அந்தப்பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள் முன் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சென்றவிடுகின்றனர்.

அதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியவில்லை. கடைகள் முன்பும் வாகனங்களை நிறுத்தி சென்றுவிடுவதால் வியாபாரிகள் கடைகளில் இருந்து வெளியே வர முடியவில்லை.

அதுபோல், வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் வாகன காப்பகம் போல் சாலைகளிலேயே அடுத்தடுத்த வரிசைகளில் வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை நிறுத்தி சென்றவிடுகின்றனர்.

அதனால், சாலையில் விட்ட வாகனங்களை எடுக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். கழிப்பிட செல்வதற்கு மாநகராட்சி சாலைகளில் கழிப்பிட செய்து கொடுக்கவில்லை.

வியாபார நிறுவனங்களில் உள்ள கழிப்பிட அறைகள் போதுமானதாக இல்லை. அதனால், மக்கள், சாலைகளை கழிப்பறைகளாக பயன்படுத்துகின்றனர். அதனால், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்கள் அனைத்தும் தூர்நாற்றம் வீசுகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆங்காங்கே தேவையான நிரந்தர கழிப்பிட அறைகள் உள்ளன. அதை மக்கள் பயன்படுத்த ஆர்வம்காட்டவில்லை. பெரியார் பஸ்நியைம், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் பிரமாண்ட கார்க் பார்க்கிங் கட்டப்படுகிறது. அது செயல்பாட்டிற்கு வந்தபிறகு இந்த பிரச்சனை ஏற்படாது, ’’ என்றனர்.

SCROLL FOR NEXT