அய்யலூர் ஆட்டுச்சந்தையில் அதிக ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் விற்கவந்தவர்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. தீபாவளி விற்பனையாக இன்று ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரசித்திபெற்றது. அதிகாலை 4 மணிக்கு ஆட்டுச்சந்தை தொடங்கி காலை 10 மணிக்குள் முடிவடைந்துவிடும்.
ஆடு, கோழி ஆகியவை விற்பனைக்கு வரும். திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அய்யலூர் அமைந்துள்ளதால், ஆட்டுச்சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் சந்தைக்கு வந்துசெல்வர். இதனால் ஆடுகள் விற்பனை வாரந்தோறும் அதிகளவில் இருக்கும்.
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் பிறந்த சில தினங்களே ஆன குட்டி முதல் கிடா வரை விற்பனைக்கு வரும்.
கோயில் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், கறி விற்பனையாளர்கள், வளர்ப்பதற்கு ஆடுகள் வாங்குவோர் என அய்யலூர் ஆட்டுச்சந்தையில் சராசரியாக வாரந்தோறும் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும்.
இந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு நேற்று கூடிய சந்தையில் அதிகபட்சமாக ரூ.2.50 கோடி வரை ஆடுகள் விற்பனையானது.
தீபாவளியை முன்னிட்டு கறிக்கடைக்காரர்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச்சென்றனர். தீபாவளி நேரம் என்பதால் அதிகவிலை இருக்கும் என கருதி வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்குபவர்கள் அதிகம் பேர் வரவில்லை.
எனவே குட்டி ஆடுகள் அதிகளவில் விற்பனையாகவில்லை. கறிக்கடைக்காரர்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
ஆடுகள் வரத்து சந்தைக்கு வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருந்தது. இதனால் ஆடுகள் விற்பனை அதிக அளவில் இருந்தாலும் ஆடுகளை விற்க வந்தவர்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
ஐந்தாயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வந்தநிலையில் நான்காயிரம் ஆடுகள் வரை நேற்று சந்தையில் விற்பனையானது.