மதுரையில் அதிகாலையில் ‘வாக்கிங்’ செல்வோரையும், இரவுப் பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் தொழிலாளர்களையும் சாலையில் கூட்டமாகத் திரண்டு தெரு நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மனிதனைச் சார்ந்து வாழும் வீட்டு விலங்கினம் நாய். இவைகள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புகள், சாலைகளில் வசிக்கும் காவலாளி போல் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. ஆனால், அவை வசிக்கும் பகுதிகளுக்கு வரும் அந்நிய நபர்களை துரத்துகின்றன.
அதிகாலை, இரவு நேரங்களில் சொல்லவே வேண்டாம், அந்நியர்கள் யாரும் தெருநாய்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாது.
அதுவே, தெருநாய்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் குறைவதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் தெருநாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதால் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்து, அவற்றுக்குத் தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவை சில சமயங்களில் ஆக்ரோஷமாக மாறிவிடுகின்றன.
கடந்த கரோனா ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் தொற்று நோய்க்கு பயந்து வீட்டிற்குள் முடங்கினர். அதனால், தெருநாய்கள் உணவு இல்லாமல் பட்டினியால் இறந்தன. அவற்றுக்கான சிகிச்சையும் கிடைக்காமல் அவை மிகவும் பாதிக்கப்பட்டன.
தன்னார்வலர்கள், பலரின் முயற்சியால் அவர்கள் மூலம் நேரடியாகவும், கால்நடை பராமரிப்புத் துறை மூலமும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டன. ஆனால், தற்போது மீண்டும் உணவு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுதால் தெருநாய்கள் வருவோர், போவோரைத் துரத்தும் ஆக்ரோஷ மனநிலைக்கு மாறியுள்ளன.
ஊரடங்கிற்குப் பிறகு தற்போது அதிகாலை நேரங்களில் முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் மிக ஆர்வமாக வாக்கிங் செல்ல ஆரம்பித்துள்ளனர். ஈக்கோ பூங்கா, சுந்தரம் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மீண்டும் வழக்கம்போல் மக்கள் அதிகளவு வாக்கிங் செல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனால், தெருநாய்கள் துரத்துவதால் அவர்களால் அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்ல முடியவில்லை. குறிப்பாக சுந்தரம் பூங்காவில் வாக்கிங் செல்லும் நடைபாதைகளில் கூட தெருநாய்கள் படுத்துத் தூங்குகின்றன. அந்தப் பூங்காவில் வாக்கிங் முதியவர்கள், பெண்கள் வாக்கிங் செல்ல அச்சமடைந்துள்ளனர்.
அதுபோல், மதுரையில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இரவு சிப்ட் பணி நடக்கிறது. அப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் நள்ளிரவு வீடு திரும்புகின்றனர். அவர்கள் பைக்கில் சாலையில் செல்லவே முடியவில்லை. தெருநாய்கள் குரைத்தப்படி துரத்துகின்றன. ஒரு நாய் குரைக்கவோ, துரத்தவோ ஆரம்பித்தால் பின்தொடர்ந்து ஏராளமான தெருநாய்கள் குவியத்தொடங்கி வாகனங்களில் செல்வோரையும், வாக்கிங் செல்வோரையும் துரத்த ஆரம்பிக்கின்றன. வாகனங்களில் செல்வோர் நிலைகுலைந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்லும் பரிதாபங்கள் நள்ளிரவில் நடக்கின்றன. நாய் கடித்தோ, அது துரத்தியோ கீழே விழும் சம்பவங்கள், பெரியளவுக்கு வெளியே வராததால் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி முன்போல் நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்டுப்படுத்தவே முடியவில்லை!
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வழக்கம்போல் தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி பணிகள் நடக்கிறது. ஆனால், புதிய நாய்கள், நகர்ப்பகுதிகளுக்கு வந்துவிடுகின்றன. 6 மாதத்திற்கு ஓருமுறை அவை இனப்பெருக்கம் செய்வதால் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
2015-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மதுரையில் மட்டுமே 47 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. தமிழக அளவில் 2 கோடிக்கும் மேலான தெருநாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மதுரையில் தெருநாய்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளது, ’’ என்றனர்.