திருப்பத்தூர் அருகே கொள்ளுகுடிபட்டியில் பறவைகளுக்காக தீபாவளிக்கு வெடி வெடிக்காத கிராமமக்களை கவுரவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் இனிப்பு வழங்கினார். அருகில் மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன். 
தமிழகம்

பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக வெடி வெடிக்காத கிராமம்: இனிப்பு வழங்கி கவுரவித்த சிவகங்கை ஆட்சியர்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக கிராம மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

அவர்களைக் கவுரவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

திருப்புத்தூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேட்டங்குடிபட்டி -கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் 17 எக்டேரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இந்த சரணாலயத்திற்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீதோஷண நிலைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும், பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரைர, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை போன்ற 217 வகையான 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன.

இனப்பெருக்கம் முடிந்ததும் ஏப்., மே மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லும். இந்த பறவைகளுக்காக கிராமத்தினர் கண்மாய்க்குள் வேட்டைக்காரர்களை அனுமதிப்பதில்லை.

பறவை முட்டைகளை சேதப்படுத்தும் குரங்குகளையும் கண்காணித்து விரட்டுகின்றனர்.

மேலும் வெடிச் சத்தம் பறவைகளைப் பாதிக்கும் என்பதால் 1972-ம் ஆண்டு முதல் 48 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.

இந்நிலையில் அக்கிராமமக்களை கவுரவிக்கும் விதமாக வனத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து வனத்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 3-ம் இடம் பிடித்த கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த சத்தியபிரியாவிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன், உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், வனவர்கள் அப்துல் பைசல், வினோத்குமார், பிரகாஷ், வனக்குழுத் தலைவர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT