காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி அரசு சார் கூட்டுறவு நிறுவனமான கான்ஃபெட் நிறுவன ஊழியர்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் மூடி கிடக்கும் கான்ஃபெட் நிறுவனத்தின் 3 பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள 12 மாதங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், 2 ஆண்டுகளாக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த சேமநல நிதி உள்ளிட்ட தொகைகளை செலுத்த வேண்டும்,
கான்ஃபெட் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது, போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் அம்மாள்சத்திரம் பகுதியில் உள்ள கான்ஃபெட் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று (நவ. 11) முதல் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (நவ. 12) காலை காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, ஊழியர்கள் அதே பகுதியில் நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. கான்ஃபெட் ஊழியர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.