யானைகவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், அறிக்கையில் காட்டும் ஆர்வத்தை முதல்வர் சட்டம்-ஒழுங்கிலும் காட்ட வேண்டும் என விமர்சித்துள்ளார்.
சென்னை யானைகவுனியில் நேற்றிரவு தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். விவாகரத்துப் பிரச்சினையில் மகாராஷ்டிராவிலிருந்து மருமகளே சகோதரர்களுடன் வந்து சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. தற்போது தனிப்படை போலீஸார் அவர்களைப் பிடிக்க மகாராஷ்டிரா சென்றுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:
“தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்திவிட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்”.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.