வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை பெருநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கரூர், சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்குதொடர்பாக சென்னை மாநகரபோக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் கணேசனிடமும் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று இரவு கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.