தமிழகம்

கிண்டி ஐடிஐக்களில் பணிமனை உதவியாளர் பணிக்கு 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

கிண்டியிலுள்ள ஐடிஐ.க்களில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) மற்றும் மகளிர் ஐடிஐ ஆகியவற்றில் காலியாகவுள்ள பணி மனை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணிமனை உதவியாளர் நிலை யில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் , பிட்டர், குளிர்பதனம் மற்றும் குளிர்சாதன பழுதுநீக்குபவர், மகளிருக்கு வெட்டுதல், தைத்தல் ஆகிய பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (என்டிசி அல்லது என்ஏசி) பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு கடந்த ஜூலை 1-ம் தேதி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் பெயர், கல்வித்தகுதி, தொழில்நுட்ப கல்வி, முன் அனுபவம், ஜாதி, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை இம்மாதம் 31-ம் தேதிக்குள் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT