பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016-ல்நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8-ல் மட்டுமே வென்றது. 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 50 சதவீதத்துக்கும் அதிகமான தொகுதிகளில் வென்ற நிலையில் காங்கிரஸ் 20 சதவீத இடங்களில்தான் வென்றது. திமுகவைப் போல காங்கிரஸும் 50 சதவீத இடங்களில் வென்றிருந்தால் கருணாநிதி முதல்வராகியிருப்பார். அதை காங்கிரஸ் தகர்த்து விட்டது என்று திமுகவினர் குற்றம்சாட்டினார். அதற்கு அன்றைய திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்தார். காங்கிரஸின் தோல்விக்கு திமுகவினர் சரிவர தேர்தல் பணியாற்றாததும் காரணம் என்று கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனால், 2021 பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கக் கூடாது என்று திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வந்தன. ஆனாலும், 2016-ல் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாகவும் கூறப்பட்டன.
இந்நிலையில், பிஹார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டும், காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. 144 தொகுதிகளில் போட்டியிட்ட ஆர்ஜேடி, 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 19 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) 12 தொகுதிகளில் வென்றுள்ளது.
ஆனால், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. கூட்டணி கட்சிகள் எல்லாம் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் சுமார் 25 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பிஹாரைப் போல தமிழகத்திலும் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் அதுஅதிமுக கூட்டணிக்கு சாதகமாகி விடும் என்ற அச்சம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு அதிகமானவாக்கு வங்கி உள்ள தொகுதி,செல்வாக்கான வேட்பாளர் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘பிஹாரிலும், தமிழகத்திலும் காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் வாக்கு சதவீதம் உள்ளது. அதனால், கூட்டணி கட்சிகளை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால், மாவட்டச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் போன்ற கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், காங்கிரஸ் வென்றால் தொகுதி மீண்டும் தமக்கு கிடைக்காது என்று கருதி சரிவர தேர்தல் வேலை செய்வதில்லை. சில தொகுதிகளில் காங்கிரஸை தோற்கடிக்கவும் வேலை செய்கின்றனர். இதுவே, காங்கிரஸ் தோற்பதற்கு காரணம். இதை ஸ்டாலின் சரிசெய்ய வேண்டும். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் முறையாக தேர்தல் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றனர்.