நொய்யல் மற்றும் கோவையைச் சுற்றியுள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளைச் செய்துவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டனுக்கு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2019-ம் ஆண்டின் தென் இந்திய பிரிவுக்கான ‘Best Water Warrior’ என்ற விருதை வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
கோவையில் உள்ள குளங்களை புனரமைக்க ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ கடந்த 2017-ல் உருவாக்கப்பட்டு, இரா.மணிகண்டன் ஒருங்கிணைப்பில் நான்கு ஆண்டுகளாக நொய்யல் ஆறு மற்றும் அதனை நம்பியுள்ள பேரூர் பெரியகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சுண்டக்காமுத்தூர் கிணறு, குட்டைகள், நீர்வழித்தடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. தன்னார்வலர்கள் உதவியுடன் இதுவரை 113 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. வெள்ளலூர் குளக் கரையில் பல்லுயிர்ச் சூழலை மேம்படுத்த 6000 மரங்கள் கொண்ட மியாவாக்கி அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மூலிகை மற்றும் மலர் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களின் உதவியுடன் 19.5 கிலோமீட்டர் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மலுமிச்சம்பட்டி பெரிய குட்டை, குப்பனூர் வெள்ளாச்சி குட்டை, சென்னனூர் மாகாளியம்மன் கோவில் குட்டை, தேவராயபுரம் கடைக்காரன் குட்டை ஆகியவை தூர்வாரப்பட்டு தண்ணீர் தேங்கும் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விருது பெற்றது குறித்து இரா.மணிகண்டன் கூறும்போது, “இந்த அங்கீகாரத்துக்கு முதன்மை காரணம் தன்னார்வலர்கள். தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வரும் நாட்களில் நொய்யலை உயிரோட்டமுள்ள நதியாக மாற்ற தேவையான நடவடிக்கையில் ஈடுபட முயற்சிப்போம். கோவையில் உள்ள 900-க்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்களை ஆவணப்படுத்துதல், அதன் கொள்ளளவை அதிகரிக்க, சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன் தூர்வாருதல், நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்” என்றார்.