கரோனா மற்றும் மழை காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது. வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நன்றாக இருக்கும். இந்த ஆண்டு அதுபோல இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும்ஒருநாளே உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீவுத்திடல் உள்ளிட்ட பல இடங்களில்பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பலசரக்குக் கடைகளிலும் பட்டாசுகள் விற்பனையாகின்றன. இருப்பினும் கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய நடுத்தர மக்கள்வேலையிழப்பு, வருவாய் இழப்பால் சிரமப்படுகின்றனர். அதனால் பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் என்.ராஜா கூறியதாவது:
கரோனா காரணமாக பல வியாபாரிகள் பட்டாசு வாங்கி விற்க முன்வரவில்லை. சென்னை மற்றும் புறநகரில் குறிப்பாக பூந்தமல்லி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு கடைகள் வைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு 3 கடைகள் மட்டுமே வைத்துள்ளனர். தீவுத்திடலிலும் கடைகள் எண்ணிக்கை குறைவுதான். மொத்தத்தில் பட்டாசு கடைகள் எண்ணிக்கை 30 சதவீதம் குறைவுதான்.
2015-ம் ஆண்டுக்குப் பிறகு நவ. 10-ம் தேதிக்குப் பிறகு தீபாவளி வந்திருக்கிறது. பொதுவாக அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தீபாவளி வந்துவிடும். இந்த ஆண்டு நவ. 14-ம் தேதி வருவதால், வடகிழக்குப் பருவமழை அதிகாக இருக்கும் நேரம் என்பதாலும் பலரும் பட்டாசு விற்க முன்வரவில்லை.
போனஸ் காரணம்
தீபாவளிக்கு முந்தைய ஞாயிறு விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். இந்த ஆண்டு அதுபோல இல்லை. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் போனஸ் குறைவாக வழங்கியிருப்பது, பல தனியார் நிறுவனங்கள் போனஸ் வழங்காதது போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.