கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31 ஆயிரத்து 500 கல்லாதோருக்கு ‘கற்போம், எழுதுவோம்’ இயக்கம் மூலம் கற்பித்தல் பயிற்சி அளிக்கப் பட உள்ளது.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 1.24 கோடி எழுத்தறிவற்ற, கல்லாத மக்களை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றும் வகையில் ‘கற்போம், எழுதுவோம்’ இயக்கம் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நேற்று முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் நாராயணா திட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார். புள்ளியியல் அலுவலர் டல்லஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், கணேசன், அப்துல் சத்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் பேசிய தாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 31 ஆயிரத்து 500 கல்லாதோர் கண்டறியப் பட்டுள்ளனர். 1500 பள்ளிகளில் செயல்படும் கற்பித்தல் மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் ‘கற்போம், எழுதுவோம்’ இயக்கம் செயல்படுத் தப்படுகிறது. முதல்கட்டமாக இந்த இயக்கத்தின் மூலம் 11 ஆயிரத்து 488 கல்லாதோர் பயனடைவார்கள். ஆண்டுக்கு மூன்று தேர்வுகளும் 120 மணி நேர பாட வேளைகளும் கல்லா தோர் இருக்கும் இடத்துக்கே தன்னார்வலர்கள் நேரில் சென்று கற்பித்தல் பயிற்சியை அளிப்பார்கள்.
தற்போது மாவட்ட அளவிலான பயிற்சியை தொடர்ந்து, வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் கல்வி வட்டார அளவில் கற்போம், எழுதுவோம் மையங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக் கப்படும். இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் சுந்தரலிங்கம், முருகேசன், தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் மாவட்ட கருத்தாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர். இதில் 24 ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் 14 ஆசிரியர் கள் கலந்து கொண்டனர்.