அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் எந்த மர்மும் இல்லை. என்ன மர்மம் என்று கூறுங்கள்? என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார் தமிழக முதல்வர் பழனிசாமி.
கரானோ பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் விருதுநகரில் இன்று மாலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
"கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு சுமார் 103 காய்ச்சல் முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்டன.
இதில் 4,55,825 பேர் முகாமில் பங்குபெற்றனர். காய்ச்சல் அறிகுறி இருப்போர் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கரானா பரவலால் தொழில்கள் பாதிக்கப்பட்டதால் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினோம். பட்டாசுத் தொழில் தடையில்லாமல் நடைபெறவேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். பட்டாசுத் தொழிலைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
விருதுநகர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 7 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு இந்த அரசு.
முதல்வரின் சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 8,250 மனுக்கள் பெறப்பட்டு 4,131 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 5,762 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் தொடர்பாக 3,802 மனுக்கள் பெறப்பட்டு தகுதியான 1,178 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2,797 பேர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பத்ததில் 1,705 பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அரசின் சார்பில் அந்த மருந்து வழங்கப்படும். அமைப்புசார தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
தற்போது உடல் உழைப்பு நலவாரியத்தின் கீழ் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருகின்றனர். இதில் சுமார் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனியாக அவர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அரசு அறிவித்த வேளாண் தொடர்பான 3 சட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக யாராவது கூற முடியுமா? எதிர்க் கட்சியில் உள்ளவர்களுக்கு விவசாயத்தைப் பற்றியே தெரியாது. யாரோ எழுதிக்கொடுப்பதை வைத்துப் படிப்பார். சட்டத்திற்கு யார் நடந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. யார் மீதும் பாரபட்சம் கிடையாது.
கரோனா பாதித்து மருத்துவ சிகிச்சைபெற்ற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், வேண்டும் என்றே திட்டமிட்டு எதிர்க் கட்சித் தலைவர் அவதூரான செய்தியைப் பரப்பி வருகிறார். ஸ்டாலின் விரக்தியின் விழும்பிற்குச் சென்றுவிட்டார். அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் எந்த மர்மும் இல்லை. என்ன மர்மம் என்று கூறுங்கள்?
அதே காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் முதல்வர் கலைஞர் சேர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றார். சிகிச்சை அளித்த மருத்துவர்களை நீங்கள் குறைகூறுகிறீர்களா? அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவதூரான பிரச்சாரத்தை எதிர்க் கட்சித் தலைவர் பரப்புகிறார். நீங்கள் உங்கள் தந்தையை அந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தீர்கள்.
அதே மருத்துவமனைதானே ஒவ்வாரு நாளும் அறிக்கைவிட்டார்கள். அப்படியெனில் நீங்கள் ஏதாவது தவறு செய்தீர்களா என்ற சந்தேகம் இப்போது ஏற்படுகிறது. மருத்துவர்களை கொச்சைப்படுத்திப் பேசுவது கண்டணத்திற்கு உரியது.
எல்லா உயிரும் அரசுக்கு முக்கியம். இதில் அரசியல் செய்வது வேதனையளிக்கிறது. பதவி ஆசைதான் வேண்டும் என்றால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகுத்துவார்கள்.
ஸ்டாலின் உண்மையான அரசியல் கட்சித் தலைவராக இருந்தால், உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் நம்மையும் நமது மருத்துவர்களையும் செவிலியர்களையும் பாராட்ட வேண்டும். கேரளாவைவிட தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எதிர்க் கட்சியினர் இதில் அரசியல் விளையாட வேண்டாம். எந்த குறைசொன்னாலும் எடுபடாது.
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் கூட அடுத்தத் தேர்தலில் நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மீதான தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எப்படி அது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. முடிவு வேறு விதமாக இருந்தால் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க முடியாது. அவரது கணவு பலிக்காது. நல்ல எண்ணம் படைத்தால் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தீய எண்ணம் கொண்டால் ஆண்டவன் பார்த்துக்கொள்வார் என்றார்.