தமிழகம்

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: இன்று முதல் 5 மையங்களில் இயக்கம் 

செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று முதல் 5 மையங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எந்த ஊருக்கு எந்த மையத்தில் பேருந்து, ஹெல்ப்லைன், முன்பதிவு இணையதளம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்துப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குத் தீபாவளிக்கு முன் செல்வதற்கு நவ.11,12,13 ஆகிய தேதிகளில் 14,757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்து குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் நவ.11 முதல் நவ.13 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,247 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிப் பண்டிகை முடிந்தபின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் நவ.15 முதல் 18 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,000 பேருந்துகளுடன், 3,416 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,610 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,026 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தீபாவளி 2020 - சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் (11/11/2020 முதல் 13/11/2020 வரை)

1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.

2. கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம்

ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்)

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

3. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

4. பூந்தமல்லி பேருந்து நிலையம்:

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.

5. கோயம்பேடு பேருந்து நிலையம்:

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர, இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம் மற்றும் கோயம்புத்தூர்)

* முதல்வர் அண்மையில் அறிவித்த தளர்வுகளின்படி புதுச்சேரிக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிகப் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள்

பேருந்து நிலையங்கள் முன்பதிவு மையங்கள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் 10, மெப்ஸ் (தாம்பரம் சானிடோரியம்) 02, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் 01. மொத்தம் 13.

முன்பதிவு வசதி

முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

பயணிகளின் வசதிக்காக 24/7 கட்டுப்பாட்டு அறை

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24/7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை ((Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, நோய்த்தொற்றுக் காலத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்''.

இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT