தமிழகம்

சமூக வலைதளங்களிலிருந்து இரண்டாம் குத்து திரைப்பட டீஸரை நீக்குக: உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு

கி.மகாராஜன்

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலிருந்து இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீஸரை உடனடியாக நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த லெட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள், காட்சிகள் ஆபாசமாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது. இப்படத்துக்கான போஸ்டரும் ஆபாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் ஆன்லைன் வழியில் கல்வி கற்பிப்பதால், இளையதள பயன்பாடு அதிகளவில் உள்ளது. அப்போது இப்படத்தின் டீசர் குறுக்கிடுவதால் குழந்தைகளின் கவனம் திசை திருப்பப்படுகிறது.

எனவே இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசல் மற்றும் போஸ்டர்களை சமூக வலைதளங்கள், ஊடகங்களில் இருந்து நீக்கவும், படத்தை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு 32 காட்சிகள் வெட்டப்பட்டு, ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள், காட்சிகள் நாகரீகமும், நன்னெறியும் இல்லாமல் ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்தங்களுடன் உள்ளன. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற டீசர்கள் இணையதளத்தில் பரவுவது கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும். குற்றங்களை அதிகரிக்கும்.

எனவே, இரண்டாம் குத்து திரைப்படத்தில் டிரெய்லரை அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இந்த மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர், டிஜிபி, தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், திரைப்பட தணிக்கைக்குழு செயலர், தணிக்கைக்குழு மண்டல அலுவலர், திரைப்பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணையை டிச. 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT