தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் இதுவரை வீழ்ந்து கிடந்த பூக்களின் விலை தற்போது உயரத் தொடங்கியுள்ளது. அதனால், 2 நாட்களுக்கு முன் கிலோ 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ரூ.600 விற்கிறது.
மதுரை மல்லிகைப்பூவுக்கு புகழ்பெற்றது என்றாலும் மற்ற அனைத்து வகை பூக்களும் இங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி ரக ரோஜா பூக்கள் மட்டுமே ஓசூரில் இருந்து விற்பனைக்கு இங்கு வருகிறது.
மற்ற பூக்கள் உள்ளூரிலேயே பெரும்பாலும் அறுவடை செய்து விவசாயிகள் விற்கக் கொண்டு வருகின்றனர்.
கரோனா ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டதால் பூக்கள் விற்பனை வீழ்ந்தது. ஒரு கட்டத்தில் மல்லிகைப் பூக்களை வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் செடிகளிலேயே பறிக்காமல் விட்டனர். அதன்பிறகு தற்போது ஊரடங்கு தளர்வால் கோயில்கள் திறக்கப்பட்டதால் பூஜைப் பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. அதனால், கரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் பூக்கள் விலை உயரவில்லை.
இந்நிலையில் தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் மதுரையில் மீண்டும் பூக்கள் விலை உயரத்தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் மல்லிகைப்பூ கிலோ ரூ.250-க்கு விற்றது. நேற்று ரூ.380க்கு விற்றது. இன்று திடீரென்று கிலோ 600-க்கு விற்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மலர் சந்தை வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘ மல்லிகை ரூ.600, பிச்சிப்பூ ரூ.300, முல்லை ரூ.400 செவ்வந்தி ரூ.150 விற்கிறது. மற்ற பூக்கள் விலை இன்னும் 2 நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மல்லிகைப்பூ இனி விலை குறைய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அதன் வரத்து குறைவாக உள்ளது, ’’ என்றார்.