பல கோடி மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமையான பழந்தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வந்த சரஸ்வதி மகால் நூலகத்தைப் பராமரிக்காமல் அரசு கைவிட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிய நூல்கள் திருட்டுப்போயுள்ளன, அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சோழர்கள் காலத்தில் கோயில்களில் இருந்த ஓலைச்சுவடிகள், 1535 முதல் 1675 வரை தஞ்சையை ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்களால் சேகரிக்கப் பெற்ற தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருத ஏட்டுச்சுவடி நூல்கள், தஞ்சை அரண்மனையில் ‘சரஸ்வதி பண்டாரகம்’ என்ற நூலகம் அமைக்கப் பெற்றுப் பாதுகாக்கப்பட்டன.
1675 முதல் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், பல அரிய ஓலைச்சுவடிகளும், நூல்களும் சேகரிக்கப் பெற்று, சரஸ்வதி மகால் நூலகமாகப் பெயர் பெற்று அங்கே பாதுகாக்கப்பட்டன.
1916-ம் ஆண்டு, தஞ்சை மாவட்ட ஆங்கிலேயே நீதிபதி ஒருவரின் முயற்சியால், அந்த நூலகம் அரசுடைமை ஆக்கப்பெற்றது. நடுவண் அரசு, மாநில அரசு ஆகியவற்றின் நிதி உதவியோடு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே, நூலகத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.
பல்வேறு துறைகள் சார்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே உள்ளன. குறிப்பாக, சித்த வைத்தியம் சார்ந்த ஓலைச்சுவடிகள் இங்குதான் பெருமளவில் உள்ளன. தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டுத் துறைகளின் அறிவுப் பெட்டகமாக இந்நூலகம் திகழ்கின்றது. கடந்த நூற்றாண்டில், தமிழறிஞர்களின் மேற்பார்வையில் நூலகம் திறம்பட இயங்கி வந்தது.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக, மேலாண்மை இயக்குநர், மேலாண்மை அலுவலர்கள் இல்லை. அப்பொறுப்புகளுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும், பல ஆண்டுகளாகப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால், நூலகம் சீரழிந்து வருகின்றது.
தரங்கம்பாடியில் அச்சிடப் பெற்ற முதல் அச்சு நூல் வேத ஆகமம் என்ற அச்சு நூல், இந்த நூலகத்தின் காட்சியகத்தில் வைக்கப்பெற்று இருந்தது. 2012 அக்டோபர் 7 ஆம் நாள் திருட்டுப் போய்விட்டது. அந்த நூல், இப்போது, ஜெர்மனி நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது. நூலகப் பொறுப்பாளர்கள், பெருந்தொகைக்கு அந்தப் புத்தகத்தை விற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், திருட்டுப் போன நாளில், இந்த நூலகத்திற்கு வந்த ஜெர்மானியர்கள் திருடிச் சென்றதாகப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரணை முழுமை பெறவில்லை. ஜெர்மனியில் இருந்து அந்தப் புத்தகத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. பன்னாட்டுச் சந்தையில், அதன் ஏல மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். அதுபோன்ற அரிய பல நூல்களும் திருட்டுப் போயிருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆங்கிலேயே அரசு காலத்தில், பர்னல் என்பவரால் ஆக்கப்பெற்ற நூல் பட்டியல் ஆவணம் இருக்கின்றது. அதை ஒப்பிட்டுக் கணக்கு எடுத்துப் பார்த்தால், திருட்டுப் போன நூல்களின் விவரத்தை எளிதில் அறியலாம். தவறான பைண்டிங் முறையாலும், கறையான்களாலும் அழிந்து போன நூல்களை, மன்னரின் சேகரிப்புத் தொகுப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றார். அதுகுறித்து, அறிஞர்கள் குழுதான் முடிவு செய்ய வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு முன்பு, 65 ஊழியர்கள் இங்கே பணிபுரிந்து வந்தனர். இப்போது, 10 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஓலைச்சுவடிகளை, நூல்களாக அச்சிடும் பணி முறையாக நடைபெறவில்லை. தடைப்பட்டு நிற்கின்றது. அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். திருட்டுப்போன பழந்தமிழ் நூல்களை மீட்க வேண்டும்; நூலகத்தைத் தரம் உயர்த்த வேண்டும்.
தமிழ்நாட்டின் சொத்துகளுள் ஒன்றாகிய தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தைப் பாதுகாப்பதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”.
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.