சென்னையில் 5 இடங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்த்தபடியே செல்லும் பயணிகள். படம்: ம.பிரபு 
தமிழகம்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இன்று முதல் 15 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பயணத்துக்கு அனுமதி

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்லவசதியாக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு 15 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இன்று (நவ.11) முதல் 13-ம் தேதி வரைசிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த 3 நாட்களும் சென்னையில் இருந்து 9,510 பேருந்துகள், மற்ற பகுதிகளில் 5,247 பேருந்துகள் என மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அனைத்து பேருந்து நிலையங்களிலும் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை, மாநகராட்சி, உள்ளாட்சித் துறையுடன் இணைந்து கிருமிநாசினி தெளிப்பது மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் செல்வது உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள்,போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கூட்ட நெரிசலைகுறைக்கும் விதமாக, கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்துபேருந்துகளை பிரித்து இயக்குவதற்கும், நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகள் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நின்று செல்லவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (மெப்ஸ்) இருந்தும், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும்பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட தொலைதூர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியபோது, ‘‘முதல்நாளான 11-ம் தேதி (இன்று) மட்டும் 3,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 300 சிறப்பு பேருந்துகள் உட்படமொத்தம் 2,300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளுக்கு தகவல் அளிக்க பேருந்து நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக, சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த பேருந்து நிலையங்களுக்கு 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT