தமிழகம்

தமிழகம் முழுவதும் 38 நகைக் கடைகளில் வருமான வரி சோதனை: வரி ஏய்ப்பு புகார்களின்பேரில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் 38 நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகார்களின்பேரில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பல ஆண்டுகளாக வரி செலுத்தாமலும், வரி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நிறுவனங்களிலும், வரி மோசடி குறித்து புகார்கள் வந்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நகைக் கடை ஒன்றில் நேற்று காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நகைக் கடை உரிமையாளரான மோகன்லால் கபாரியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட நகைக் கடை நிறுவனம், தங்க நகை மொத்த வியாபாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதால், இவர்களின்வணிக தொடர்பில் இருக்கும் மும்பையில் உள்ள நிறுவனத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள 2 நகைக் கடைகளில் நேற்று வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். திருநெல்வேலி, மதுரை மற்றும் சென்னையில் இருந்து 5 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேற்று காலை 6 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். கடைக்குள் வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர்.

சோதனை நடந்த கடைகளில் ஒரு கடையில் ‘916’ தர நகைகளுக்கு பதிலாக தரம் குறைந்த தங்கம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சை கருத்து பரவியது. இதனால், கடையநல்லூர் பகுதி நகைக் கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. போலி தங்கம் குற்றச்சாட்டு வருமான வரி சோதனைக்கு அடித்தளமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோதனை நடைபெற்ற கடையை படம் பிடிக்கசென்ற செய்தியாளர்களை கடையின் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று, தமிழகம் முழுவதும் 38 சிறிய வகை நகைக் கடைகளில் சோதனை நடந்தது.இதில் கணக்கில் வராத சொத்துகள், தங்க கட்டிகள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT