காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனின் அவதார நட்சத்திரத்தை ஒட்டி நேற்று 1008 லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற சக்தி தலமாகும். இங்கு பத்மாசன நிலையில் வீற்றிருக்கும் காமாட்சி அம்மன் ஐப்பசி பூரத்தில் அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் அம்மன் அவதரித்த இந்த நாளில் பாலாபிஷேகம் நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு 1008 லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டார். இதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இரவு அம்மன் வீதியுலாவும் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன.
கரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் அரசு விதிப்படி குறைவான நபர்களே பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.