புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் இலவச அரிசி, கொண்டை கடலை விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குநர் சாரங்கபாணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி மற்றும் கொண்டைக் கடலை செப்டம்பர் வரையிலான காலத்துக்கு பயனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது. தற்போது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான அரிசி மற்றும் கொண்டைக் கடலை விநியோகம் இன்று (நவ. 11) முதல் நவம்பர் 13ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. பயனாளிகள் அனைவரும் கடந்த முறை பருப்பு விநியோகம் நடைபெற்ற பள்ளிகளுக்குச் சென்று அரிசி மற்றும் கொண்டை கடலையை பெற்றுக் கொள்ளலாம்.
பயனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதோடு, மையத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.