சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 15-ம் தேதி மாலை முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையும், மகரவிளக்கு திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 14-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் கேரள அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அவை குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறியிருப்பதாவது:
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கேரள அரசின் https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், வார முதல் நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பக்தர்களும், வார கடைசி நாட்களில் நாளொன்றுக்கு இரண்டாயிரம் பக்தர்களும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஒவ்வொரு பக்தர்களும் தரிசனத் துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பதற் கான பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 10 வயதுக்கு குறைந்தவர்களுக்கும், 60 வயதுக்கு மேலானவர்களுக்கும் அனுமதி கிடையாது. சர்க்கரை வியாதி போன்ற இணை வியாதிகள் உள்ளவர்கள் யாத்திரை செல்வதற்கு தடை செய்யப்படுகிறது.
அரசு காப்பீடு அட்டை பெற்றுள்ள பக்தர்கள் சபரிமலை பயணத்தின்போது தங்களுக்கான காப்பீடு அட்டைகளை உடன் வைத்திருக்க வேண்டும்.
பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்வது, பம்பா ஆற்றில் குளிப்பது மற்றும் சுவாமி சன்னிதானம், பம்பா கணபதி கோயிலில் இரவில் தங்குவது ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
சபரிமலை செல்வதற்கு எருமேலி, வட சேரிக்கரா ஆகிய இரு வழித்தடங்களின் மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
சானிடைசர் வைத்திருக்க வேண்டும். சபரிமலைக்கு செல்லும் பாதையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள கோவிட் பரிசோதனை மையங்களில், சொந்த செலவில் பரிசோதித்து நிலக்கல் என்ற இடத்துக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக நோய்த்தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றுடன் வர வேண்டும். நிலக்கல் மற்றும் பம்பா பகுதியில் பக்தர்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். இந்த பகுதிகளில் கொட்டகை அமைக்க அனுமதியில்லை. இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.