கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா, சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் நடக்கிறது.இது தொடர்பாக கவிக்கோ பவள விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் தி.மு.அப்துல் காதர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கவிக்கோ அப்துல் ரகுமானின் பிறந்தநாள் பவள விழா, சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் 2 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வெ.சோலைநாதன் தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி (நாளை) மாலை 3 மணிக்கு விழா தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ‘கவிக்கோ’ ஆவணப்படத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிடுகிறார். இரவு 8 மணிக்கு ‘கவிக்கோவின் இசைப்பாடல்கள்’ குறுந்தகட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார்.
27-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் மற்றும் பத்திரிகை யாளர்கள், எழுத்தாளர்களும் மாலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துரை வழங்குகின்றனர். இரவு 8 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று, ‘கவிக்கோ கருவூலம்’ நூலை வெளியிடுகிறார். கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அப்துல் காதர் கூறினார்.