நிலத்தின் உரிமையாளர் 2000-ம் ஆண்டில் இறந்த நிலையில், 8 ஆண்டுக்கு பிறகு அவர் தனது நிலத்தை மற்றொருவருக்கு கிரையம் செய்து கொடுத்தது தொடர்பாக பந்தல்குடி சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெலாத்தூரை சேர்ந்த முருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
விருதுநகர் அப்பயநாயக்கன்பட்டியில் எனது தந்தை அய்யாச்சாமி ரெட்டியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அவர் கடந்த 2000-ல் இறந்துவிட்டார். எனது பெற்றோருக்கு நானும், என் சகோதரர் பெருமாள் ஆகியோர் தான் சட்டப்பூர்வ வாரிசுகள். கடந்த 2005-ல் என் சகோதரர் பெருமாள் இறந்துவிட்டார்.
கடந்த 2018-ல் என் தந்தை பெயரில் இருந்த சொத்தை என் பெயரிலும், எனது சகோதரர் பெருமாளின் மனைவி, அவரது பிள்ளைகள் பெயருக்கு மாற்றம் செய்ய முடிவு செய்து பந்தல்குடி சார்-பதிவாளர் அலுவலகம் சென்றோம்.
ஆனால் 2008-ல் என் தந்தை அவரது பெயரில் இருந்த நிலத்தை தேனி போடியை சேர்ந்த மயில்வாகனனுக்கு கிரையம் செய்து கொடுத்திருப்பதாக சார்-பதிவாளர் அலுவலக பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. என் தந்தை 2000-ல் இறந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து அவர் எப்படி நிலத்தை கிரையம் செய்து கொடுத்திருப்பார்.
இது தொடர்பாக எஸ்பியிடம் புகார் அளித்தோம். ஆனால் போலீஸார் எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் முடித்து வைத்துவிட்டனர். எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்கள் நிலத்தை மீட்டு ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சார் பதிவாளரின் தலையீடு இல்லாமல் மோசடியாக பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை. எனவே சம்பந்தப்பட்ட சார் பதிவாளரையும், மோசடியாக நிலத்தை கிரையம் செய்தவரை கைது செய்ய வேண்டும் என்றார்.
மேலும், மனுதாரர் தந்தை பெயரில் இருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.