தமிழகம்

கேரளாவிலிருந்து குமரி வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்: தமிழக முதல்வர் பழனிசாமி

எல்.மோகன்

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வருவோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதேபோல், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு உயரதிகாரிகள், சமபந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வு முடிவில் பள்ளிகள் திறப்பு குறித்து குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று நாகர்கோவில் வந்தார்.

அவர் ரூ.268 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளையும், புதிய திட்டங்களை துவங்கியும் வைத்தார். 2,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சி முடிவில் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் “கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருகே கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளது. கேரளாவில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்வோரும், கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வருவோரும் அதிகமாக உள்ளனர்.

எனவே திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வருவோரை கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் உத்தரவிடப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருவோர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

காமராஜர் ஆட்சியில் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் ஏழை, எளியவர்களுக்காக பல திட்டங்கள் வகுத்தவர். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரி மணக்குடி மேம்பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பாலம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரோனா வைரசை தடுக்கும் வகையில் தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடை கன்னியாகுமரி சுற்றுலா மையத்திற்கு நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். இரு புதிய நவீன படகுகளுடன் படகு போக்குவரத்தும் துவங்கப்படும்.

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு உயரதிகாரிகள், சமபந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வு முடிவில் பள்ளிகள் திறப்பு குறித்து குறித்து முறையாக அறிவிக்கப்படும். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளில் நல்ல நிலையில் உள்ள படகுகள் எடுத்து வரப்பட்டுள்ளன. எடுத்து வரமுடியாத படகுகள் பழுதாகி இருப்பதால் அதை அங்குள்ள நீதிமன்ற வழிகாட்டுதல்படி அழிப்பதாக கூறியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் அதிகமாக இருப்பதாக கூறப்படும் விஷயத்தில், எவ்வளவு பேருக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முடிவுகள் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். குமரியில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் குறித்த நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் வராததால் குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலுகா பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து ஏற்கெனவே கேரள அரசுடன் இரண்டு மூன்று கட்டமாக பேசியுள்ளேன்.

இதைப்போன்று தமிழகத்தில் உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறோம். இப்பிரசசினைக்கு தீர்வு காணப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT