கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துத் திரையரங்குகளும் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. மதுரை, ராம்நாட் ஏரியாவில் பழைய படங்களை மட்டுமே ஓட்டுகிற பிலிம் ரோல் பயன்படுத்தும் தியேட்டர்கள் அனைத்தும் வழக்கம்போல் உற்சாகமாக இயங்கின. வழக்கமாக இந்த தியேட்டர்களில் காலைக் காட்சி கிடையாது. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் வெளியாவதால் நல்ல நேரத்தில் இயக்க வேண்டும் என்று காலைக்காட்சியும் ஓட்டப்பட்டது.
மதுரை கல்லாணை திரையரங்கில் 'நினைத்ததை முடிப்பவன்' என்ற எம்ஜிஆர் படம் திரையிடப்பட்டது. வழக்கமாக இந்த தியேட்டரில் காலைக் காட்சி கிடையாது என்பதால், யாருமே வரவில்லை. வயதான மூதாட்டி ஒருவர் மட்டும் தன்னுடைய பேரனுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். வழக்கமாக 10 பேருக்குக் குறைவாக இருந்தால் படம் ஓட்டப்படாது. ஆனால், அந்தப் பாட்டிக்கும், பேரனுக்கும் ராஜமரியாதை கொடுத்து படத்தை ஓட்டினார்கள் திரையரங்கு ஊழியர்கள்.
அம்பிகா தியேட்டரில் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' எனும் ஹாலிவுட் படம் திரையிடப்பட்டு இருந்தது. ஆனால், காலைக்காட்சிக்கு வெறும் 8 பேர் மட்டுமே வந்திருந்ததால், படம் ஓட்டப்படவில்லை. ரசிகர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுத்ததுடன், பாப் கார்ன் ஒன்றையும் இலவசமாகக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
தென் தமிழகத்தின் மிகப்பழமையான தியேட்டரான (தொடங்கப்பட்ட ஆண்டு 1939) மதுரை சென்ட்ரல் தியேட்டரில், அர்ஜூன் நடித்த 'ஆயுத பூஜை' படம் திரையிடப்பட்டிருந்தது. 1,732 இருக்கைகள் கொண்ட அந்தத் திரையரங்கில் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 30 பேர் மட்டுமே ரசிகர்கள் வந்திருந்தனர். இருந்தாலும் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படாமல் படம் ஓட்டப்பட்டது.
பழைய பிலிம் தியேட்டர்கள் வழக்கம்போல இயங்கினாலும், மதுரையில் இளைஞர்களைப் பெரிதும் கவர்கிற நவீன டிஜிட்டல் புரொஜெக்டர்கள் கொண்ட தியேட்டர்களில் பெரும்பாலானவை ஓடவில்லை. இதே நிலைதான் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் நிலவியது. ஆக, கரோனா காலத்தில் டிஜிட்டல் திரையரங்குகளைப் பழைய பிலிம் தியேட்டர்கள் வென்றுவிட்டன.
இதுகுறித்துத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ரமேஷ்பாபுவிடம் கேட்டபோது, "தியேட்டர் உரிமையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான நாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கடை திறந்த மகிழ்ச்சி அது. கூட்டம் இல்லாதது, டிஜிட்டல் படங்களைத் திரையிடுவதில் சிரமம் போன்றவை இருந்தாலும், எப்படியோ தியேட்டரைத் திறந்துவிட்டோம் என்று ஒருவித நிம்மதியுடன் அவர்கள் இருந்தார்கள்.
தீபாவளி நெருக்கத்தில் மக்கள் திரையரங்குக்கு வரத் தொடங்கிவிடுவார்கள் என்று நம்புகிறோம். டிஜிட்டல் திரையரங்குகளிலும் ஓரிரு நாட்களில் படங்கள் திரையிடப்படும். அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளதால், மக்கள் தயங்காமல் குடும்பத்தோடு திரையரங்கத்திற்கு வர வேண்டும்" என்றார்.