பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு கணக்குப் பதிவேடு வழங்கியதில் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டதாக ஆவின் அதிகாரிகள் மீது எழுந்த புகாரில் பால் வளத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஆவின் சார்பில் தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கணக்கு பதிவேடு நோட்டு வழங்கியதில் ரூ.2 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில்
உசிலம்பட்டியைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டத்தில் உள்ள 750 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டறவு சங்கங்களுக்கு வரவு செலவு கணக்குகளைப் பதிவு செய்ய ஆவின் (மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்) சார்பில் தலா 3 பதிவேடுகள் வழங்கப்பட்டன.
இதன் விலையாக ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் ரூ.2,688 எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 30 ஆவின் சார்பில் மூன்று கணக்கு பதிவேடு நோட்டுகளுக்கு ரூ.2,688 செலுத்த வேண்டும் வேண்டும் என தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு மாவட்ட ஆவின் உத்தரவிட்டுள்ளது.
மூன்று கணக்கு பதிவேடு நோட்டுகளுக்கு ரூ.2,688 வீதம் சுமார் ரூ.2.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரியளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறைக்கு மனு அனுப்பினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கணக்கு பதிவேடு நோட்டு வழங்கியதில் சுமார் ரூ.2 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நிஷா பானு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பால் வளத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.