தமிழகம்

சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற சிறப்பு மருத்துவ மேற்படிப்பில், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்களான எம்.செய்யது பக்ருதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடப்புகல்வியாண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் முதுநிலை மற்றும்டிப்ளமோ சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். அதன்பிறகே இப்படிப்புகளுக்கான கலந்தாய்வை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

உத்தரவு நகல் சமர்ப்பிப்பு

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதஇடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு சார்பில் நவ.7-ம்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறி அதற்கான உத்தரவு நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் எந்த முடிவும் எடுக்க முடியாது. எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’’ என வாதிட் டார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு மருத்துவப் படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்கமாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இடங்களை ஒதுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்து, இதுதொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்து கொண்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT