போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்றும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏவான செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2016 ஆண்டு வரை அதிமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் பணமோசடி செய்துவிட்டதாக செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சம்மன் அனுப்பி அவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கில்போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
4 மணி நேரம் விசாரணை
இந்நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அவர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு விசாரணைக்காக நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று கூறி போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர்.
விசாரணை முடிந்து வெளியேவந்த செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேசும்போது, ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்’ என்றார்.