செங்கம் அருகே ஓலை குடிசையில் அவதிப்பட்டு வந்த மாணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் ஆசிரியர் ஒருவர் வீடு கட்டி வருவது அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
‘ஆசான்’ என்ற சொல், அனைவரது உள்ளத்திலும் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கும். பாடம் கற்றுக் கொடுப்பதோடு மட்டும் இல்லாமல், மாணவர் களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர். இத்துடன் தங்களது சேவையை நிறுத்திக் கொள்ளாமல், ஏழை மாணவர்களின் குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரத்தில் ‘தோள் கொடுத்து’ வருகின்றனர்.
அந்த வரிசையில் இடம் பிடித் துள்ளார் ஆசிரியர் இரா.தமிழ்கனி. இவர், தனது மாணவருக்காக ரூ.1 லட்சம் மதிப்பில் வீடு கட்டி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் கிராமம் ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் மாணவர் அஜித்(14). இவர், அதே கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்ட தாயும் காணாமல் போனார். பாட்டியின் அரவணைப் பில் ‘ஓலை குடிசை’யில் மாணவர் வசித்து வருகிறார். உணவுக்கு கூட மற்றவர்களை எதிர்பார்த்து உள்ளார். மாணவரின் நிலையை அறிந்து, வீடு கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஆசிரியர் தமிழ்கனி.
வாழ தகுதியற்ற வீடு
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆசிரியர் இரா.தமிழ் கனி கூறும்போது, “குப்பனத்தம் உயர்நிலைப் பள்ளியில் அறி வியல் பாட ஆசிரியராக கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். பள்ளி நாட்களில், வீடுகளில் மாணவர்கள் படிக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு பகுதியாக ஆசிரியர்கள் சென்று கண் காணித்து வருகிறோம். பெற் றோரை சந்தித்து, மாணவர்கள் பற்றி கேட்டறிவோம். அவ்வாறு செல்லும்போது, மாணவர் அஜித் தின் வீட்டை கண்டு, நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரது ஓலை குடிசை வீடானது, வாழ்வதற்கு தகுதியற்ற வீடாக இருந்தது.
மாணவர் அஜித்தை அழைத்து கேட்டபோது, பெற்றோரை இழந்து பாட்டியின் பாதுகாப்பில் வாழ்ந்து வருவதாகவும், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டின் திண்ணையில் அமர்ந்து படிப்பதாக கூறினார். இதையடுத்து, அந்த மாணவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்து, ரூ.1 லட்சம் மதிப்பில் 2 சதுரம் பரப்பளவில், வீடு கட்டும் பணியை கடந்த மே மாதம் தொடங்கினேன். கட்டு மானப் பணி முடிந்துவிட்டது. வீட்டுக்கு வெள்ளை மட்டும் அடிக்க வேண்டும். அப் பணி நிறைவு பெற்றதும், கார்த்திகை மாதத்தில், மாணவரிடம் வீட்டை ஒப்படைத்துவிடுவேன். இதற்காக என்னுடைய சக ஆசிரியர்களும் உதவி புரிந்துள்ளனர்” என்றார்.
திண்ணையில் தஞ்சம்
மாணவர் அஜித் கூறும்போது, “சிறு வயதிலேயே தந்தை முருகன் உயிரிழந்து விட்டார். தாயார் வசந்தி, காணாமல் போனார் அவரை தேடி வருகிறோம். பாட்டி கோவிந்தம்மாள் பாது காப்பில் தம்பியுடன் வாழ்ந்து வருகிறேன். படிப்பில் சராசரி மாணவர். பள்ளிக்கு தவறாமல் சென்றுவிடுவேன்.
ஆசிரியர்களை மதித்து, அவர்கள் சொல்வதை படிப்பேன். எனது வீட்டில் படிக்க முடியாது. அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டின் திண்ணையில் அமர்ந்து படிப்பேன். மழை காலத்தில், எங்க ளது ஓலை குடிசையில் தங்க முடி யாது. அப்போது, மற்ற வீடுகளின் திண்ணையில் தஞ்சமடைந்து விடுவோம். என்னுடைய நிலையைஅறிந்து, எனக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் ஆசிரியர் தமிழ்கனி.
எனக்கு வீடு கிடைக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனக்கு உதவிசெய்த அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.