தமிழகம்

தமிழகம் முழுவதும் ஊராட்சி கிடங்குகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கி.மகாராஜன்

தமிழகத்தில் ஊராட்சி கிடங்குகளை வாடகைக்கு எடுத்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரிய வழக்கில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருந்துவருகிறது. ஆனால் விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. அரசுகளும் விவசாயிகள் மீது அக்கறை கொள்வதில்லை. மழைப்பொழிவு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. பல விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் திருவாரூர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 விவசாயிகள் உட்பட மொத்தம் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய 830 நேரடி கொள்முதல் நிலையங்களே உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனால் தமிழகத்தில் ஊராட்சி கிடங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தார்ப்பாய், செட் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழக விவசாயிகளுக்கு அதிக அளவு மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 935 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனரை எதிர் மனுதாரராக சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT