திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே அரசியல் செய்ய முடியாத அளவிற்கு மிரட்டினார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி சார்பில் செல்லூர் பகுதியில் ரூ.60 லட்சத்தில் கபடி வீரர்களை சிறப்பிக்கும் வகையிலான சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இதனை பார்வையிட்டார்.
மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் மாநகராட்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக அரசியல் செய்யும் வகையிலான ஜனநாயக பாதுகாப்பை அதிமுக அரசு கொடுத்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாது.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே அரசியல் செய்ய முடியாத அளவிற்கு மிரட்டினார்கள். மனித வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்தார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது.
10 ஆண்டுகளாக தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. இந்த அமைதி சூழலை அனைத்து அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ராஜபக்சே கொலை குற்றவாளி எனவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியது அதிமுக அரசுதான்.
7 பேர் தூக்கு மேடைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான். நீட் இட ஒதுக்கீடு போன்று 7 பேர் விடுதலை குறித்து உரிய நடவடிக்கையை முதல்வர் மேற்கொள்வார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் முதல்வர் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.